விருதுநகர் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் ரூ 3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டம், குண்டாயிருப்பு கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச்  சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (17.02 2024) எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் உட்பட 10 நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் ஆகிய இருவரையும் சம்பவ இடத்திற்கு அனுப்பி மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளேன்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், பலத்த காயம் அடைந்தவருக்கு ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.