சென்னை மாவட்டம் ஓஎம்ஆர் சாலை துரைப்பாக்கம் மாருதி நகர் 2-வது சாலையில் உதயன்-மீனா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மூன்று வயதுடைய பிரதிக்ஷா என்ற மகள் உள்ளார். இவர்களது வீட்டிற்கு வெளியே சாலை ஓரம் மழை நீர் வடிகால் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு தடுப்புகள் இல்லாமல் இருந்தது. தற்போது பள்ளத்தில் கழிவுநீரும் மழை நீரும் தேங்கி கிடக்கிறது. நேற்று வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த பிரதிக்ஷா எதிர்பாராதவிதமாக அந்த பள்ளத்தில் தவறி விழுந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் பிரதிக்ஷாவை மீட்டு அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அறிந்த மாநகராட்சி ஊழியர்கள் இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்று தடுப்புகள் அமைத்து மின் மோட்டார்கள் மூலம் மழை நீர் மற்றும் கழிவு நீரை அப்புறப்படுத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.