ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாவரம் கிராமத்தில் தினேஷ் (25) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெற்றோர் திருமண ஏற்பாடு செய்த நிலையில் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த லாவண்யா (19) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தினேஷ் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இருப்பினும் இருதரப்பு பெற்றோரும் பேச்சுவார்த்தை நடத்தி திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர்.

இவருடைய திருமணம் நேற்று நடைபெற இருந்த நிலையில் அதற்கு முந்தைய நாள் இரவு தினேஷ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதனால் அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தினேஷ் மற்றும் அவருடைய பெற்றோர் சம்பந்தத்தின் பேரில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர். அதன்படி லாவண்யாவுக்கும் தினேஷுக்கும் மருத்துவமனை வளாகத்தில் திருமணம் நடந்து முடிந்தது. இதைத்தொடர்ந்து அவருடைய மனைவியுடன் தினேஷை மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்சில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.