ஈரோடு மாவட்டத்தில் உள்ள நகலூர் பகுதியில் கோசல் ராம் (65) என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் ஆதி கேசவ பெருமாள் திருக்கோவிலை கட்டியுள்ளார். இந்த கோவிலை அவர் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டி நிர்வகித்து வருகிறார். இந்த கோவிலில் வெள்ளிக்கிழமை மற்றும் அமாவாசை போன்ற தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அந்த சமயங்களில் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வரும் நிலையில் அவர்களுக்கு கோசல் ராம் அருள்வாக்கு சொல்லி வருகிறார்.

இவர் சொன்ன விஷயங்கள் பல அப்படியே நடந்ததால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இந்த கோவிலில் பள்ளி கொண்ட பெருமாள் சிலை கருவூலத்தில் இருக்கிறது. இந்த சிலையின் மீது சாமியார் கோசல் ராம் அமர்ந்துள்ளார். அவருக்கு பூசாரிகள் பாலபிஷேகம், பன்னீர் அபிஷேகம், இளநீர் அபிஷேகம் என பலவகையான பொருட்களால் அபிஷேகம் செய்ததோடு தீபாரதனை காட்டினார். மேலும் இது தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் பலர் அதற்கு ஆதரவு தெரிவித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.