திண்டுக்கல்லில் குடும்ப பொருளாதார சிக்கலால் செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர், தனது குற்ற உணர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் மன்னிப்பு கடிதம் எழுதியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேடசந்தூர் குறிஞ்சி நகரைச் சேர்ந்த பழனியப்பன், ஓய்வு பெற்ற ராணுவ வீரர். அவரது மனைவி சிவானந்தம் தனியாக இருந்தபோது, கத்தியை காட்டி மிரட்டிய இளைஞர், அவரது கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயினை பறித்துள்ளார். அப்போது செயின் கம்மலில் சிக்கி மூதாட்டியின் காது அறுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் காவல்துறையினர், காயமடைந்த சிவானந்தத்தை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

சம்பவம் தொடர்பாக வேடசந்தூர் டிஎஸ்பி தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சிசிடிவி கேமராக்கள் மூலம் ஆய்வு செய்தபோது, செயின் பறிப்பில் ஈடுபட்டவர் குஞ்சுவீரன் பட்டியைச் சேர்ந்த சக்திவேல் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த பகுதியில் பதுங்கியிருந்த சக்திவேலை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். டிப்ளமோ முடித்த சக்திவேல், தனியார் நூற்பாலையில் வேலை செய்துவந்தார். கடன் தொல்லையும், குடும்ப பிரச்சனைகளும் காரணமாக, முதல்முறையாக திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த நிலையில் சக்திவேல், தனது செயலில் குற்ற உணர்ச்சி தாங்க முடியாமல், மூதாட்டிக்கு மன்னிப்பு கடிதம் எழுதி, அவரின் சட்டை பையில் வைத்துள்ளார். இதனை போலீசார் கண்டறிந்தனர். அந்த கடிதத்தில் பாட்டி என்னை மன்னித்து விடு என எழுதி வைத்திருந்ததாக தெரிகிறது.