சண்டிகரில் கடந்த 2008-ஆம் ஆண்டு 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணக்கட்டுகள் நீதிபதி வீட்டின் வாசலில் கிடந்தது. விவகாரம் தொடர்பாக, 17 ஆண்டுகளுக்குப் பிறகு நீதிபதி நிர்மல் யாதவ் குற்றமற்றவர் என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்து அவரை விடுவித்துள்ளது.

அந்த ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி, பஞ்சாப்-ஹரியானா உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிய நீதிபதி நிர்மல்  வீட்டின் வாசலில் பணம் கிடைத்ததை தொடர்ந்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டு வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில் நீதிபதி நிர்மல் யாதவ் தனது மீது குற்றச்சாட்டு உண்மையல்ல என்றும், எந்த ஆதாரமும் இல்லை என்றும் வலியுறுத்தி மேல்முறையீடு செய்தார். சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் 84 சாட்சியர்களில் 69 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டபோதும், அவருக்கு எதிராக உறுதியான ஆதாரம் எதுவும் இல்லாததை கொண்டு நீதிமன்றம் அவரை முழுமையாக விடுவித்தது.

இதேபோல் சமீபத்தில் டெல்லி நீதிபதி யஷ்வந்த் வர்மா இல்லத்தில் பணக்கட்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரமும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக அவரை அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்துள்ளனர். அவரும் தன்மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.