மதுரை மாவட்டம் திருமங்கலம் கொடுமர தெருவில் அல்லீமா என்பவர் வசித்து வருகிறார். இவரது 4 வயது மகன் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற தெரு நாய் திடீரென சிறுவன் மீது பாய்ந்து கடித்து குதறியது. இதனால் சிறுவன் அலறி சத்தம் போட்டுள்ளான். உடனே அந்த பகுதி மக்கள் வெளியே ஓடிவந்து தெரு நாயை விரட்டி அடித்தனர். இதனையடுத்து காயமடைந்த சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

சிகிச்சைக்கு பிறகு சிறுவன் பத்திரமாக வீட்டிற்கு அழைத்து வரப்பட்டான். இந்த நிலையில் தெரு நாய் சிறுவனை கடித்து குதறும் சிசிடிவி காட்சிகள் சோசியல் மீடியாவில் வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறும்போது, நகராட்சி அதிகாரிகளிடம் நாய் தொந்தரவு இருப்பதாக பலமுறை புகார் அளித்து விட்டோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.