
நாம் தமிழர் கட்சியின் மகளிர் மாநில பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள் அந்தக் கட்சியிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் முக்கிய புள்ளியாக திகழ்ந்த காளியம்மாள் திடீரென கட்சியிலிருந்து விலகியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே நாம் தமிழர் கட்சியிலிருந்து ஏராளமான நிர்வாகிகள் விலகி வரும் நிலையில் அவர்கள் சீமான் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை காளியம்மாள் கேட்டதாகவும் ஆனால் தன் மனைவி கயல்விழியை அந்த பதவிக்கு கொண்டு வர சீமான் முடிவு செய்ததால் காளியம்மாள் தட்டி விடப்பட வேண்டிய பிசிறு என்று கூறிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதிலிருந்தே காளியம்மாள் மற்றும் சீமான் இடையே கருத்து மோதல் என்பது ஏற்பட்டது. இதை தொடர்ந்து காளியம்மாள் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவர் திமுகவில் இணைவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் நாளை விஜய் முன்னிலையில் இணைய இருக்கிறார் என்று செய்தி வெளியாகியுள்ளது. இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் தங்கச்சி காளியம்மாள் தமிழக வெற்றி கழகத்தில் இணைய இருப்பது எங்களுக்கு முன்பே தெரியும். நாங்கள் அதற்காக காளியம்மாளுக்கு வாழ்த்துக்களை கூட தெரிவித்து விட்டோம் என்று கூறினார். மேலும் காளியம்மாள் தமிழக வெற்றி கழகத்தில் இணைவதை சீமானே தற்போது உறுதிப்படுத்தியுள்ளது பரபரப்பாக பேசப்படுகிறது.