
திருநெல்வேலி மாவட்டம் கொக்கரகுளம் உச்சமாகாளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கஜேந்திரன் (55). இவரது வீட்டில் கழிவறை சீரமைப்பு பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. நேற்று முன்தினம் வேலாயுதம் (30) என்பவர் மோட்டார் சுவிட்சை போட்டு புதிதாக கட்டிய சுவருக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார். அப்போது இரும்பு ஏணியை சுவரில் சாய்த்து வைத்துள்ளார். அந்த சுவரில் மின் கணக்கீட்டு மீட்டர் பெட்டி இருந்தது. இதனால் மின்சாரம் தாக்கி வேலாயுதம் அலறி சத்தம் போட்டார்.
அந்த சத்தம் கேட்டு வேலாயுதத்தை மீட்க முயன்ற சக தொழிலாளிகளான ரவி, மாரியப்பன் ஆகியோரையும் மின்சாரம் தாக்கியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் மின்வயர்களை அறுத்து விட்டு 3 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே ரவியும், வேலாயுதமும் பரிதாபமாக உயிரிழந்தனர். மாரியப்பனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.