திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள நீயுடவுன் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி, ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி பூனைகுட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியராக கடந்த 12 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். அந்த பள்ளியில் பெரிய மோட்டூர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் தற்காலிக கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார்.

சமீபத்தில், அந்தப் பெண் தமிழ் வழி சான்று அப்ரூவல் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சுப்பிரமணி அந்த வேலை சரியாக செய்தால் முத்தம் கொடுப்பதாக கூறியதாக கூறப்படுகிறது. அதற்கு அந்தப் பெண் மறுப்பு தெரிவித்தபோதும், எதிர்பாராத முறையில் சுப்பிரமணி முத்தம் கொடுத்து அங்கிருந்து சென்றுள்ளார்.

இதுகுறித்து அந்த பெண், தன் உறவினர்களிடம் தகவல் தெரிவித்ததால், அவர்கள் வந்து பள்ளியை முற்றுகையிட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் பள்ளிக்கு சென்று பெண்ணின் உறவினர்களை சமாதானப்படுத்தியுள்ளனர்.

பின்னர், வட்டார கல்வி அலுவலர் அசோக் குமார் மற்றும் குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பு அலுவலர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அந்தப் பெண்ணின் புகாரின் அடிப்படையில், சுப்பிரமணி கைது செய்யப்பட்டு விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டார்.