
வேலூர் மாவட்டம் வசந்தநடை பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார். இவர் ஈரோடு மாவட்ட ஆயுதப்படை பிரிவு போலீசில் தலைமை காவலராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் நவீன் குமார் திருப்பூர் ஆயுதப்படை பிரிவிலிருந்து ஈரோடு ஆயுதப்படை பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். நேற்று முன்தினம் வேலை முடிந்து நவீன் குமார் வீட்டிற்கு வந்தார். அப்போது அவரது மனைவியும், மகனும் வெளியூரில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தனர். அந்த சமயம் நவீன் குமாரின் தந்தை நடராஜன் தனது மகனை செல்போன் மூலம் அழைத்துள்ளார்.
ஆனால் நீண்ட நேரமாகியும் நவீன்குமார் அழைப்பை ஏற்காததால் சந்தேகமடைந்த நடராஜன் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது நவீன் குமார் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நவீன் குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் குடும்ப பிரச்சனை காரணமாக நவீன்குமார் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது பணிசுமை காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.