செங்கல்பட்டு மாவட்டம் பொழிச்சலூர் பாலாஜி நகரை சேர்ந்தவர் ஜெயராமன். இவர் பாஜக கட்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு துறை துணைத்தலைவராக பதவி வகித்து வருகிறார். இவரது மனைவி அஸ்வினி பாஜக மாவட்ட செயலாளராக உள்ளார். ஜெயராமன் யெங் ஸ்போர்ட்ஸ் ஆஃப் இந்தியா என்ற அலுவலகம் ஒன்றை நடத்தி வந்தார். அதில் தான் ஒலிம்பிக் விளையாட்டு கமிட்டி உறுப்பினர் மற்றும் இன்டர்நேஷனல் ஸ்போர்ட்ஸ் டீமில் ரெஃப்ரி எனக் கூறிப் போலியான விசிட்டிங் கார்டு தயாரித்துள்ளார்.

அதன் மூலம் தான் சந்திக்கும் நபர்களிடம் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறினார். இவர் கூறியதை நம்பி வேலூர் மாவட்டத்தை சேர்ந்த லோகேஷ்குமார் என்பவர் வேலை வாங்கி தருமாறு கூறி 17 லட்சம் ரூபாய் வரை ஜெயராமனிடம் கொடுத்துள்ளார். அந்த பணத்தை வாங்கிக் கொண்டு வேலை வாங்கி கொடுக்காமல் அலைக்கழித்து வந்த ஜெயராமன், அவரது மனைவி அஸ்வினி மற்றும் அலுவலக உதவியாளர் பிரியா ஆகியோரிடம் லோகேஷ்குமார் பணத்தை திருப்பித் தருமாறு கேட்டார், அப்போது மூன்று பேரும் ஒரு பணி நியமன ஆணையை வழங்கினார்கள். அது போலியான நியமன ஆணை என்பதை அறிந்த லோகேஷ் மீண்டும் ஜெயராமனிடம் சென்று பணத்தை கேட்டுள்ளார்.

ஆனால் ஜெயராமன் முறையாக பதில் அளிக்கவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு லோகேஷ்குமார் ஜெயராமனின் ஸ்போர்ட்ஸ் அலுவலகம் சென்று பணத்தை திருப்பி தருமாறு கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஜெயராமன், அவரது மனைவி அஸ்வினி, உதவியாளர் பிரியா, மாமியார் சத்யா சக்கரவர்த்தி ஆகியோர் லோகேஷ் குமாரை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து லோகேஷ் குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஜெயராமனை தேடி வருகின்றனர். மேலும் அவர்கள் மீது 2 பிரிவில் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். இதேபோன்று ஏராளமான இளைஞர்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி கோடிக்கணக்கில் பண மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.