இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் ஃபோன்களின் பயன்பாடு ஒவ்வொரு நாளும் அபரிதமாக வளர்ச்சியை எட்டி  உள்ளது. முன்பெல்லாம் ஸ்மார்ட்போன்களை பொழுதுபோக்கிற்காக மட்டுமே இணையத்தை பயன்படுத்திய காலங்கள் கடந்து இன்றைக்கு பலரின் வாழ்வாதார தேவைகளை நிவர்த்தி செய்யும் பல்வேறு பணிகளை ஸ்மார்ட்போன்கள் செய்து வருகிறது. அதாவது ஆன்லைனில் ஷாப்பிங் மற்றும் ஆன்லைன் வணிகம் என்பது வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது. மாணவர்களின் கல்வி தேவையை நிவர்த்தி செய்யவும் ஸ்மார்ட்போன்கள் பயன்பட்டது. இந்நிலையில் பலரின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்கு பெரும் பங்கு வகிக்கக்கூடிய ஸ்மார்ட் ஃபோன்களின் இணைய பயன்பாடு என்பது ஒரு மாதத்திற்கு 19.5 ஜிபி எட்டியுள்ளதாக அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது.

அதாவது சமீபத்தில் நோக்கியாவின் வருடாந்திர மொபைல் பிராட்பேண்ட் இன்டெக்ஸ் அறிக்கையின்படி, இந்தியாவில் மொபைல் டேட்டா டிராபிக் கடந்த ஐந்து வருடங்களில் 3.2 மடங்கு அதிகரித்து மாதத்திற்கு 14 எக்சாபைட்டுளை எட்டியுள்ளது. அதேபோல் கடந்த 2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஒரு பயனரின் சராசரி தரவு நுகர்வு ஒரு பயனருக்கு ஒரு மாதத்திற்கு 19.5 ஜிபி என கூறப்பட்டுள்ளது. இது நீங்கள் உங்களது மொபைல் டேட்டாவை பயன்படுத்தி சுமார் 6,600 பாடல்களை டவுன்லோட் செய்ததற்கு சமம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் பான் இந்தியா மொபைல் டேட்டா பயன்பாடு மாதத்திற்கு 2018 இல் 4.5 எக்சாபைட்டுகளாக இருந்தது. ஆனால் 2022-ல் 14.4 எக்சாபைட்டுகளாக அதிகரித்துள்ளது என கூறப்படுகிறது.

கடந்த 2022 ஆம் ஆண்டில் 70 மில்லியனுக்கு அதிகமான 5g சாதனங்கள் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டதாக மதிப்பிடப்பட்டிருக்கின்ற நிலையில் தற்போது 4ஜி மற்றும் 5ஜி சந்தாதாரர்கள் நாட்டின் இந்த மொபைல் டேட்டா ட்ராபிக்கில் கிட்டத்தட்ட நூறு சதவிகிதத்தை கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. நோக்கியாவின் எஸ்.வி.பி மற்றும் இந்திய சந்தையின் தலைவர் சஞ்சய் மாலிக் இது குறித்து கூறியதாவது, தற்போது 4ஜி எல்டி இ நெட்வொர்க்களின் வெற்றிகரமான வரிசைப்படுத்துதலின் அடிப்படையில் மொபைல் பிராட்பேண்டின் அபரீதமான வளர்ச்சியை இந்தியா கண்டுள்ளது என தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து நுகர்வோர் மற்றும் நிறுவன பிரிவுகளுக்கென புதிய டிஜிட்டல் பயன்பாட்டு நிகழ்வுகளை இயக்குவதன் மூலமாக 5g மொபைல் பிராட்பேண்ட் பயன்பாட்டை இந்தியாவிற்கு அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என நம்புவதாக கூறியுள்ளார்.

மேலும் ஒட்டுமொத்தத்தில் இந்தியாவில் உபயோகிக்கப்படும் மொத்த மொபைல் டேட்டா வருகிற 2024 -ஆம் ஆண்டிற்குள் இரண்டு மடங்குக்கும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேப்போல் வருகிற 2027 -ஆம் ஆண்டில் தனியார் வயர்லெஸ் நெட்வொர்க்களில் நாட்டின் முதலீடு 250 மில்லியனை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக ட்ரில்லியன் டாலர் டிஜிட்டல் பொருளாதாரமாக மாற்றுவதற்கான இந்தியாவின் நோக்கத்தை ஆதரிக்கும். அதே சமயம் இந்த வளர்ச்சி நிலையான முறையில் நிர்வகிக்கப்படுவது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.