இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ரேஷன் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. ரேஷன் கார்டு என்பது அனைத்து அத்தியாவசிய தேவைகளுக்கும் பயன்படுவதால் மக்கள் அனைவரும் ரேஷன் கார்டு வைத்துள்ளனர். வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த பொருட்களை பெற ரேஷன் கார்டு என்பது அவசியமாகும். அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில் இதில் பயனுடையவும் ரேஷன் கார்டு என்பது அவசியமாகும்.

ஸ்மார்ட் ரேஷன் கார்டில் முகவரியை ஆன்லைன் மூலமாக எளிதில் மாற்றிக் கொள்ளலாம். அதற்கு தமிழ்நாடு அரசின் பொது விநியோக துறைக்கான அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnpds.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி உள் நுழைய வேண்டும். ஒருவேளை நீங்கள் கடவுச்சொல் மறந்து விட்டால் அதனை மீட்டெடுக்கும் வசதியும் அதில் உள்ளது.

பிறகு இணையதளத்தில் உள்ள ஸ்மார்ட் கார்டு சேவைகள் என்ற பிரிவை தேர்ந்தெடுத்து அதில் முகவரி மாற்றம் அல்லது address change என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். அடுத்ததாக திறக்கும் பக்கத்தில் புதிய முகவரி மற்றும் தேவையான பிற விவரங்கள் அனைத்தையும் சரியாக உள்ளிட்டு முகவரிக்கான ஆதார ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவை அனைத்தையும் சரியாக செய்து முடித்த பிறகு ஒரு வாரத்தில் உங்களுடைய முகவரி மாற்றம் செய்யப்பட்டு விடும்.