மதுரை விமான நிலையத்திற்கு செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில் ஈச்சனேரி பகுதியில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத வாலிபரின் உடல் கிடந்தது. அவரது முகம் சிதைக்கப்பட்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் அந்த வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டவர் விருதுநகரை சேர்ந்த காவலரான மலையரசன் என்பது தெரியவந்தது.

கடந்த 1-ஆம் தேதி மலையரசனின் மனைவி விபத்தில் சிக்கி காயமடைந்தார். அவர் மதுரை சிந்தாமணி பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 5 தினங்களுக்கு முன்பு மலையரசனின் மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் மலையரசன் மருத்துவமனைக்கு சென்று தனது மனைவியின் சிகிச்சை கட்டண ரசீது உள்ளிட்ட ஆவணங்களை வாங்குவதற்கு சென்றதாக தெரிகிறது. அந்த மருத்துவமனையில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அவரது உடல் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அவரை யாரோ கொலை செய்து உடலை எரித்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.