பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் சிறப்பான ராஜதந்திர முயற்சிகளின் பலனாக, கடந்த 2014 முதல் வெளிநாட்டு சிறைகளில் இருந்த 10,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மத்திய அரசின் ஒரு அதிகாரி கூறுகையில், “2014-ம் ஆண்டு முதல் பிரதமர் மோடியின் தலைமையில் இந்திய அரசு வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் நலனை முன்னுரிமையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. தூதரகங்கள் வழியாக நடத்தப்படும் பேச்சுவார்த்தைகள் மற்றும் நேரடி உயர்மட்ட தலையீடுகள் மூலம், அந்தந்த நாடுகளில் சிறையில் இருந்த இந்தியர்கள் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டு, தாய்நாட்டுக்கு திரும்பியுள்ளனர்,” என்றார்.

ரமலான் பண்டிகையை முன்னிட்டு, ஐக்கிய அரபு அமீரக அரசு 500 இந்திய கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கியுள்ளது. இது யுஏஇ – இந்தியா இடையிலான நெருக்கமான மற்றும் நம்பகமான ராஜதந்திர உறவை எடுத்துக்காட்டுகிறது. இதேபோன்று பல்வேறு நாடுகளிலும் இந்திய அரசின் முயற்சியால் முக்கியமான விடுதலைகள் நிகழ்ந்துள்ளன. எடுத்துக்காட்டாக, 2022 முதல் யுஏஇயில் இருந்து 2,783 இந்தியர்கள் விடுவிக்கப்பட்டனர். சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் 2019ல் தனது இந்திய வருகையின் போது 850 இந்திய கைதிகளை விடுவிக்க உத்தரவிட்டார். 2023ல் கத்தாரில் இருந்து இந்திய கடற்படை வீரர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இதற்கு மேலும், ஈரான் 2024-ல் 77 இந்தியர்களையும், 2023-ல் 12 தமிழகம் சேர்ந்த மீனவர்களுடன் 43 இந்தியர்களையும் விடுவித்தது. 2019-ல் பிரதமர் மோடி பஹ்ரைனுக்கு சென்றபோது, அந்நாட்டு அரசு 250 இந்தியர்களுக்கு மன்னிப்பு வழங்கியது. 2017-ல் குவைத் அமீர் 22 இந்தியர்களை விடுவித்ததுடன், 97 பேரின் தண்டனைகளை குறைத்த்து. இலங்கை அரசு கடந்த 2014 முதல் 3,697 தமிழ்நாடு மீனவர்களை விடுவித்துள்ளது. அதுபோல், பாகிஸ்தான் 2014 முதல் 2,638 இந்திய மீனவர்களையும் 71 கைதிகளையும் விடுவித்துள்ளது. இந்த நிகழ்வுகள் அனைத்தும், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் நலனுக்காக மோடி அரசு மேற்கொண்டு வரும் இடைவிடாத மற்றும் அர்ப்பணிப்புள்ள செயல்பாடுகளை வெளிக்காட்டுகின்றன.