தேனி மாவட்டம் போடி அருகே தருமத்துப்பட்டியில் உள்ள குழந்தை காப்பகத்தில் தாய் தந்தையை இழந்த குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகிறார்கள். இங்கு பல்லவராயன் பட்டியை சேர்ந்த வரதராஜன் மனைவி முனீஸ்வரி (28) என்பவர் நிர்வாகியாக உள்ளார். இதனிடையே கடந்த சில வருடங்களுக்கு முன்பு தந்தையை இழந்து தாயால் கைவிடப்பட்ட மூன்று குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் பத்து வயது சிறுவன் காப்பகத்தில் தங்கி அருகில் உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளான்.

இந்த சிறுவனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் அங்கு பணியாற்றும் ஊழியர் ஒருவர் சிறுவனிடம் விசாரித்தார். அப்போது காப்பக நிர்வாகி முனீஸ்வரி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுவன் கூறிய நிலையில் இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர் உடனே தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் புகார் அளித்தார். அதன் பிறகு காப்பகத்திற்கு விரைந்த நிர்வாகிகள் விசாரணை நடத்திய பிறகு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் முனீஸ்வரி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்த நிலையில் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.