கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காட்டூர் ராம் நகர் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு முதல் தளத்தில் உள்ள ஒரு வீட்டில் 65 வயது மூதாட்டியும் அவருடைய 40 வயது மகளும் தனியாக வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 10 வருடங்களாக வீட்டை விட்டு வெளியே வராத நிலையில் ஆன்லைனில் உணவு டெலிவரி செய்தும்  சாப்பிட்டுள்ளனர். இவர்கள் இருவருக்கும் மனநலம் சரியில்லை என்று கூறப்படுகிறது. அதன்பிறகு வீட்டில் உள்ள குப்பைகளை வெளியே போடாமல் ஆங்காங்கே சேகரித்து வைத்ததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் தற்போது வெளியே தெரிய வந்த நிலையில் கோவை மாநகராட்சி நிர்வாகம் அவர்களின் வீட்டில் உள்ள கழிவுகளை அகற்றுமாறு உத்தரவிட்டது.

அந்த உத்தரவின் படி நேற்று காலை தூய்மை பணியாளர்கள் 25 பேர் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்றனர். அங்கு துர்நாற்றம் வீசியதால் அவர்கள் முகமூடி அணிந்து கொண்டு அங்குள்ள குப்பைகளை அகற்றினர். அவர்களிடம் மூதாட்டி தகறாறு செய்தார். இருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல் அவர்கள் தங்கள் வேலையை செய்தனர். அவர்கள் வீட்டில் இருந்து மொத்தம் 3 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது. அவைகளை மூட்டை மூட்டையாக கட்டிக்கொண்டு தூய்மை பணியாளர்கள் அங்கிருந்து வாகனம் மூலம் எடுத்துச் சென்றனர். மேலும் இது தொடர்பாக இவ்வளவு வருடங்களாக அக்கம்பக்கத்தினர் ஏன் தகவல் சொல்லவில்லை என்பது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.