
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அப்துல் ஜப்பார் (60) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் தன்னுடைய வீட்டில் வைத்து மாணவர்களுக்கு அரபி பாடம் கற்றுக் கொடுத்து வந்தார். இவரிடம் 11 வயது சிறுவன் ஒருவன் படித்து வந்த நிலையில் அந்த சிறுவனை மிரட்டி அவர் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார். இந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என சிறுவனை அவர் மிரட்டியதால் பயந்து போய் அந்த சிறுவன் யாரிடமும் விஷயத்தை கூறாமல் இருந்தான். இந்நிலையில் அந்த சிறுவனின் தம்பியையும் ஆசிரியரிடம் பாடம் படிக்க பெற்றோர் அனுப்பி வைக்க முடிவு செய்தனர். அதற்கு அந்த சிறுவன் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அது தொடர்பாக பெற்றோர் விசாரித்தனர்.
அப்போதுதான் தனக்கு நேர்ந்த கொடுமைகளை பெற்றோரிடம் சிறுவன் கூறினான். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து அப்துல் ஜப்பாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை சிறுவனை மிரட்டி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார். இந்த வழக்கு போத்தன்கோடு விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அவருக்கு 56 வருடங்கள் கடுங்காவல் தண்டனையும் ரூ.76,000-ம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினர். மேலும் பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தியவருக்கு எந்த ஒரு கருணையும் காட்ட வேண்டிய அவசியம் கிடையாது என நீதிபதி தன் தீர்ப்பில் கூறினார்.