தூத்துக்குடி மாவட்டம் தேரிப்பனை சிஎஸ்ஐ கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயபால். இவர் கடந்த 6  வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அவரது மனைவி வசந்தா(70) அங்கன்வாடி ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இந்த தம்பதிக்கு சபிதா என்ற மகளும், வினோத், விக்ராந்த் என்ற மகன்களும் உள்ளனர்.

இதில் விக்ராந்த் சாத்தான்குளம் டிஎஸ்பி அலுவலகத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் வசந்தா நீண்ட நேரமாகியும் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் விக்ராந்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அவர் வீட்டிற்கு வந்தபோது முன்பக்க கதவு மற்றும் ஜன்னல்கள் பூட்டப்பட்டு இருந்தது. இதனால் விக்ராந்த் பின்பக்க கதவு வழியாக வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது மர்ம நபர் தனது தாயின் முகத்தை தலையணையால் அமுக்கி கொலை செய்து 9 பவுன் தங்க நகையை திருடி சென்றதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற வசந்தாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் அதே பகுதியில் சேர்ந்த செல்வரதி(24) என்பவர் மட்டும் மாயமாகி இருப்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து தலைமறைவாக இருந்த செல்வரதியை போலீசார் கைது செய்தனர். வசந்தாவுக்கும் செல்வரதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன் விரோதம் காரணமாக கொலை நடந்ததா? அல்லது நகைக்காக வசந்தாவை கொலை செய்தாரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு செல்வரதி சிறுமையாக இருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த பச்சிளம் குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.