
கள்ளக்குறிச்சி அருகே தச்சூர் கிராமத்தை சேர்ந்த அய்யாவு மகன் சிவக்குமார் (27) கொத்தனார் வேலை செய்து வரும் நிலையில் இவருக்கும் கச்சிராயபாளையம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் வருகின்ற ஜூலை 12ஆம் தேதி திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தது. அதற்கான அழைப்பிதழ்களை உறவினர் நண்பர்களுக்கு கொடுத்து வந்தனர். இந்த நிலையில் சிவகுமார் நேற்று முன்தினம் தன்னுடைய உறவினர் வீட்டுக்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
சேலம் மெயின் ரோட்டில் உள்ள தனியார் அரிசி ஆலை அருகே சென்று கொண்டிருந்த போது முன்னாள் சென்ற வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக சிவகுமார் திடீரென்று பிரேக் பிடித்தார். அப்போது நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து அவர் கீழே விழுந்த நிலையில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இந்த சம்பவம் குறித்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.