
சென்னை வில்லிவாக்கம் பாரதி நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(51). இவர் வில்லிவாக்கம் சிட்கோ நகர் ஒன்றாவது மெயின் ரோட்டில் தங்க நகை அடகு கடை நடத்தி வருகிறார். கடந்த 17-ஆம் தேதி வெங்கடேசன் கடையில் பலமுறை நகைகளை அடகு வைத்த பாஸ்கர்(61) என்பவர் வந்தார். அவர் 38.5 கிராம் எடையுள்ள 2 தங்க வளையல், விநாயகர் டாலரை அடகு வைத்து பணம் கேட்டுள்ளார். அந்த நகைகள் மீது வெங்கடேசனுக்கு சந்தேகம் வந்தது. இதனால் நகைகளை பரிசோதித்து பார்த்தார். அப்போது அது போலியான நகைகள் என்பது தெரியவந்தது.
இதனால் தனது கடை ஊழியர்களுடன் இணைந்து பாஸ்கரவை பிடித்து போலீசில் ஒப்படைத்தார். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் ஏற்கனவே 11 தடவை பாஸ்கர் அந்த கடையில் நகைகளை அடகு வைத்தது தெரிய வந்தது. ஆனால் அனைத்தும் போலியான நகைகள்தான். இவ்வாறாக மொத்தம் 12 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கி பாஸ்கர் மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பாஸ்கரை கைது செய்தனர். அவரிடம் இருந்த 245 கிராம் எடை கொண்ட போலி தங்க நகைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.