இஸ்ரேல் காசா மீது போர் தொடங்கி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் போதிலும் தொடர்ந்து தாக்குதல்கள் என்பது நடக்கிறது. காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஏராளமான பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். தற்போது மேற்கு கரையில் உள்ள ஹெப்ரோன் பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் ஏராளமான குழந்தைகள் கொல்லப்படும் நிலையில் தற்போது ஒரு 12 வயது சிறுவன் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது 12 வயது ஆய்மன் நாசர் அல்-ஹய்முனி, மேற்குக் கரையில் உள்ள ஹெப்ரோனில் தனது உறவினரை சந்திக்க சென்றபோது, இஸ்ரேலியா படைகளால் நடத்தப்பட்ட  கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் பலியாகினார். 2025 தொடங்கியதிலிருந்து, மேற்குக் கரையில் 16 பாலஸ்தீன குழந்தைகள் இஸ்ரேலிய படைகளால் கொல்லப்பட்டுள்ளனர், அவர்கள் எந்தவிதமான அச்சுறுத்தலையும் உருவாக்கவில்லை என்று சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன. இந்த சம்பவம் குறித்து வெளியான கண்காணிப்பு கேமரா காட்சிகள், சிறுவன் எவ்வாறு சுடப்பட்டான் என்பதை உறுதிப்படுத்துகின்றன.

காணொளியில், ஹய்முனி தனது 10 வயது சகோதரருடன் தன் பாட்டியின் வீட்டிற்கு சென்றதை காணலாம். அவர்களின் குடும்பம் ஹெப்ரோனின் ஜபால் ஜவ்ஹர் பகுதியில் வசிக்கிறது, இது இஸ்ரேலிய ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள இடமாகும். அந்த பகுதி “பிதாக்களின் சமாதி” என அறியப்படும் புனித தலத்திற்கு அருகில் உள்ளது, இது யூதர்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் முக்கியமான பகுதி. அந்த நாள் இரவு, ஹய்முனி தனது உறவினர்களுடன் வீட்டிற்குள் ஒளிந்தபோது, மற்றொரு தோட்டாவில் இருந்து சுடப்பட்ட ஒரு தோட்டா இவரை தாக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

மேற்குக் கரையில் குழந்தைகள் இழப்பது சாதாரண நிகழ்வாகிவிட்டது. 2023 அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் மேற்குக் கரையில் தங்கள் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. 2024-இல் மட்டும், 93 பாலஸ்தீன குழந்தைகள் இஸ்ரேலிய படைகளால் கொல்லப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் தகவல் தெரிவித்துள்ளன. இஸ்ரேலிய படைகளின் நடவடிக்கைகளுக்கு கண்காணிப்புப் பணிகள் குறைவாக உள்ளதால், இந்த வன்முறைகள் தொடர்ந்து அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

மனித உரிமை அமைப்புகளின் கூற்றுப்படி, மேற்குக் கரையில் தற்போது நடந்து வரும் இராணுவ நடவடிக்கைகள், பாலஸ்தீன மக்களை அவர்களது வீடுகளை விட்டு வெளியேற்றுகிறது. இதன் காரணமாக பல பகுதிகள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன. பாலஸ்தீன குழந்தைகளின் உயிரிழப்புகள் அதிகரிக்கும் எனவும், இஸ்ரேலிய படைகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு எதிராக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனவும் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.