
திருவள்ளூரில் இருந்து திருத்தணி செல்லும் வழியில் 1200 ஆண்டுகளுக்கு முன்பு குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்ட பழமையான முருகன் கோவில் அமைந்துள்ளது. கடந்த மாதம் 18-ஆம் தேதி மாவட்ட தொல்லியல் துறை அலுவலர் லோகநாதன் கோவிலுக்கு சென்று ஆய்வு செய்தபோது கோவிலின் உள்ளே நிலவரை இருப்பதை உறுதி செய்தார். பின்னர் தீயணைப்பு துறையினர் உதவியுடன் அந்த நிலவரைக்குள் இறங்கி ஆய்வு செய்தார்.
அப்போது 10 அடி உயரத்தில் 8 அடி அகலத்தில் 2 அறைகள் இருப்பதை பார்த்தார். அந்த அறைகளில் எந்த பொருட்களும் இல்லை. அந்த காலகட்டத்தில் சிலைகள், நகைகள், ஆவணங்களை பாதுகாக்க அறைகளை கட்டி இருக்கலாம் என லோகநாதன் கூறியுள்ளார். ஆய்வின்போது மாவட்ட இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர், வருவாய்த்துறையினர் மற்றும் காவல் துறையினர் உடன் இருந்தனர்.