திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பெருமாள் கோவில் தெருவில் தினேஷ்-பார்வதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது 4 வயது மகன் ரோகித் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். சிறுவனுக்கு காய்ச்சல் இருந்ததால் சென்னை அயனாவரத்தில் இருக்கும் பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில் சிகிச்சையில் இருந்த சிறுவனுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. சிறிது நேரத்திலேயே ரோகித் பரிதாபமாக உயிரிழந்தான்.

இதனால் கோபமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளித்ததால் தான் ரோகித் உயிரிழந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது ரோகித்துக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் செல்போன் வீடியோ காலில் பேசி பணியிலிருந்த மற்றொரு மருத்துவர் மூலம் சிகிச்சை வழங்கியதாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.