2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் போது பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள நேஷனல் பேங்க் ஸ்டேடியத்தில் நடந்த பாகிஸ்தான் vs நியூசிலாந்து ஆட்டத்தில் ரசிகர்கள் வருகை மிக குறைவாக இருந்தது. 29 வருட இடைவெளிக்குப் பிறகு பாகிஸ்தானில் ஐசிசி போட்டி நடத்தப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் திரண்டு வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மைதானத்தில் வெறிச்சோடி காணப்பட்டு, பெரும் எண்ணிக்கையில் காலியான இருக்கைகள் காணப்பட்டதால் சமூக ஊடகங்களில் இது குறித்து பெரும் விவாதம் எழுந்துள்ளது.

இதைப் பற்றி முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாஹ்னும் கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டரில், “சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடத்தப்படுவதைக் காண மகிழ்ச்சியாக உள்ளது. 1996க்கு பிறகு முதல் மிகப்பெரிய நிகழ்வு. ஆனால், மக்களுக்கு இதை அறிவிக்க மறந்துவிட்டார்களா? ரசிகர்கள் எங்கே?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். சமூக வலைதளங்களில் பலரும் இதை கலாய்த்து கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.