
வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே ரயில் முன் பாய்ந்து ஒரு ஆணும் பெண்ணும் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரிய வந்தது.
அதாவது லத்தேரி அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற 27 வயது வாலிபரும், கோகிலா என்ற 24 வயது கல்லூரி மாணவியும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளனர். இதில் மணிகண்டனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருக்கிறார்கள். ஆனால் மணிகண்டன் தன் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் மூலமாக கோகிலா என்பவருடன் மணிகண்டனுக்கு பழக்கம் ஏற்பட இருவரும் காதலித்து வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் இவர்கள் இருவரும் தனியாக குடும்பம் நடத்தி வந்த நிலையில் இது தொடர்பாக பெண்ணின் பெற்றோர் புகார் கொடுத்தனர். திருமணத்திற்கு பிறகு கோகிலா மணிகண்டன் வீட்டில் இருந்த நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த காவல்துறையினர் இருவரையும் அழைத்தனர். இதனையடுத்து இன்று வீட்டிலிருந்து கிளம்பிய அவர்கள் தங்களைப் பிரித்து விடுவார்கள் என்ற பயத்தில் ரயில் முன் கட்டிப்பிடித்தபடி நின்று தற்கொலை செய்து கொண்டனர் விசாரணையில் தெரியவந்தது. மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்