
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில் சென்னை அருகே நாளை கரையை கடக்கிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்கிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்க்கிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று அமைச்சர் ஆவடி நாசர் மற்றும் 6 மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
அந்த ஆலோசனை கூட்டத்தின் போது 2 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் இரவு முழுவதும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அதோடு தாழ்வான மற்றும் கரையோரம் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் அதாவது அரசு முகாம்களில் தங்க வைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். மேலும் பருவமழையை முன்னிட்டு அனைத்தும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் சரியான முறையில் மேற்கொள்வதோடு தொடர்ந்து மழை பாதிப்பினை தொடர்ந்து கண்காணித்து வரவேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.