நெய்வேலி அருகே மந்தாரக்குப்பம் பகுதியில் தாயிடம் நெய்வேலிக்கு சென்று வருவதாக கூறி சென்ற 33 வயது பெண் பிரபாவதி மர்மமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு வெள்ளூர் ஊராட்சியைச் சேர்ந்த பாஸ்கரின் மனைவி பிரபாவதி, கணவரை கடந்த ஆண்டு இழந்தார்.

அவர்களுக்கு 9 வயது மகனும், 6 வயது மகளும் உள்ளனர். கடந்த 7-ம் தேதி வீட்டிலிருந்து வெளியேறிய பிரபாவதி வீடு திரும்பாததால், அவரது தாய் தனலெட்சுமி மந்தாரக்குப்பம் போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், பிரபாவதிக்கு அதே பகுதியில் வசிக்கும் சம்பத் (33) என்ற நபருடன் நெருக்கமான உறவு இருந்தது தெரியவந்தது.

கடந்த 7ம் தேதி இரவு இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தீவிரமாகி, சம்பத் கீழே கிடந்த கட்டையால் பிரபாவதியின் தலையில் சரமாரியாக அடித்ததாக கூறினார்.

இதன் விளைவாக பிரபாவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அருகில் யாரும் இல்லாத சூழலில், சம்பத் அவரது உடலை நெல்சியின் சுரங்க பகுதியில் உள்ள பள்ளத்தில் தள்ளி மறைத்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்தைச் சென்றடைந்து, பிரபாவதியின் அழுகிய உடலை மீட்டனர். உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக நெய்வேலி டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் தலைமையில் போலீசார் மற்றும் தடயவியல் வல்லுநர்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். சம்பவம் நடந்த இடத்தில் இருந்து பல்வேறு தடயங்களை போலீசார் சேகரித்தனர்.

இறுதியாக சம்பத் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிகழ்வு பகுதியை சேர்ந்த மக்களில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.