ஹைதராபாத் சாரூர்நகர் பகுதியில் கோவில் புரோஹிதராக பணியாற்றி வந்தவர் அய்யகாரி வெங்கட சூர்யா சாய் கிருஷ்ணா. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் சாய் கிருஷ்ணாவுக்கு 30 வயது அப்சரா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் திருமணம் செய்ய வேண்டும் என அந்த பெண் அழுத்தம் கொடுத்ததால், 2023-ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் தேதி, அவர் அப்சராவை ஷம்ஷாபாத் அருகே உள்ள சுல்தான்பள்ளிக்கு அழைத்துச் சென்று, பெரிய கல்லை அவரது தலையில் போட்டு கொலை செய்தார். இதனையடுத்து சாக்கு பையில் உடலை அடைத்து சாரூர்நகரில் உள்ள மைசம்மா கோவிலுக்குப் பின்னால் உள்ள மான்ஹோலில்  வீசிவிட்டு தப்பினார்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சாய் கிருஷ்ணாவை கைது விசாரித்த போது அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். ஷம்ஷாபாத் போலீசார் சிசிடிவி காட்சிகள் மற்றும் மொபைல் சிக்னல்களின் அடிப்படையில் அவரது குற்றத்தை நிரூபித்து, நீதிமன்றத்தில் ஆவணங்களை சமர்ப்பித்தனர். இந்த கொலை விவகாரத்தில் ரங்காரெட்டி மாவட்ட நீதிமன்றம் சாய் கிருஷ்ணாவுக்கு வாழ்நாள் சிறைத்தண்டனையும், ஆதாரங்களை அழித்ததற்காக மேலும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்தது. அதோடு ரூ.10,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.