
தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் சவேரியார் கோவில் தெருவை சேர்ந்தவர் இசையாஸ். இவரது மகன் தீரண் பெனடிக் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தபோது அற்புதபுரம் சாலையில் ஒரு பண்ணை அருகே ஜல்லிக்கட்டு காளை கட்டி போட்டிருப்பதை தீரண் பார்த்துள்ளார். அவர் அந்த காளையுடன் விளையாடியுள்ளார். பின்னர் காளைக்கு மிக அருகே சென்றபோது ஆக்ரோஷமான காளை தீரணை முட்டி தூக்கி வீசியது. இதனால் படுகாயமடைந்த சிறுவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே தீரண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் தீரணின் உறவினர்கள் அந்த காளையின் உரிமையாளர் மீது குற்றம் சாட்டியுள்ளனர். அதாவது காளையின் உரிமையாளர் அவ்வழியாக செல்லும் மாணவர்களிடம் மாட்டை அடக்கினால் 200 ரூபாய் தருகிறேன் என கூறியதாகவும், பணத்திற்கு ஆசைப்பட்டு தீரண் காளையை அடக்க முயன்று உயிரிழந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.