தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று கோயம்புத்தூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, சபாநாயகர் முதலில் கண்ணாடியை பார்க்க வேண்டும். திமுகவிற்காக ஒரு அடிப்படை தொண்டரை விட சபாநாயகர் தான் அதிகம் வேலை பார்க்கிறார். தன்னுடைய தொகுதிக்கு நீர் பாசனம் வராதது குறித்து வேல்முருகன் கேள்வி எழுப்பும்போது துரைமுருகனுக்கு பதிலாக அப்பாவு சீறுகிறார். அதைப் பார்த்து திமுக அமைச்சர்கள் அமைதியாக இருக்கும்போது எப்படி இந்த கேள்வியை எல்லாம் கேட்கலாம் என்று அப்பாவு கூறுகிறார். பாஜகவின் எம்எல்ஏக்கள் கேள்வி கேட்டாலும் அப்பாவு அதையெல்லாம் தாண்டி செல்கிறார். சபாநாயகர் என்பது ஒரு நடுநிலையான பதவி. ஆனால் அப்பாவு நடுநிலையாக இருக்காமல் திமுக ஆட்சியின் பாதி விஷயத்தை பேசுகிறார். திமுக சார்பில் சட்டமன்றத்தை நடத்தும் அவர் ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்கிறார் என்றார்.

அதன் பிறகு விட்டல் குமார் கொலை வழக்கில் திமுகவிற்கு தொடர்பு இருப்பதாக கூறிய அவர் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்றார். தமிழக முதல்வர் ஸ்டாலினை நாற்காலியில் இருந்து வெளியேற்ற மக்கள் தயாராகி வருகிறார்கள். அவருடைய கண்ணுக்கு சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் லஞ்சம் ஊழல் போன்றவைகள் தெரியாது. மத்திய அரசு எதைக் கொண்டு வந்தாலும் எதிர்க்கிறார்கள். எழுதி வைத்துக் கொள்ளுங்கள் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக டெபாசிட் இழக்கும். மீதமுள்ள 34 தொகுதிகளிலும் வெற்றி மற்றும் தோல்வி இருக்கலாம். இல்லையெனில் அதில் கூட திமுக டெபாசிட் இழக்கலாம் என்று கூறினார். மேலும் 200 தொகுதிகளிலும் திமுக டெபாசிட் இழக்கும் நான் சொல்வது  நிச்சயம் நடக்கும் எழுதி வைத்துக் கொள்ளுங்கள் என்று அண்ணாமலை திமுகவுக்கு நேரடியாக சவால் விடுவது போன்று கூறியுள்ளார்.