
தமிழகத்தில் கடந்த சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அடுத்து வரும் சட்டசபை தேர்தலிலும் திமுக இதே கூட்டணியுடன் களம் காண்கிறது. அதே சமயத்தில் அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. திமுக கட்சியுடன் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் மனிதநேயம் கட்சி ஆகியவை கூட்டணியில் இருக்கும் நிலையில் தற்போது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் திமுக கூட்டணியில் இணைய இருக்கிறது.
இந்த மெகா கூட்டணியுடன் களம் கண்டாலே அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று விடும் என்ற நம்பிக்கையில் ஸ்டாலின் இருக்கிறார். அதே நேரத்தில் மெகா கூட்டணி என்று எடப்பாடி பழனிச்சாமி கூறும் நிலையில் தேமுதிக தற்போது கூட்டணியில் உள்ளது. இதேப்போன்று பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைப்பதாக கூறப்படும் நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால் தற்போது புதிதாக கட்சி தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகமும் கண்டிப்பாக திராவிட கட்சிகளுக்கு சவாலாக அமையும். நடிகர் விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கும் நிலையில் அவர் 20 சதவீத வாக்குகளை பெறுவார் என்று தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கணித்துள்ளார்.
அதே நேரத்தில் சமீபத்தில் வெளியான ஒரு கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணியின் வாக்கு சதவீதம் 5% வரை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி 43 சதவீதத்திலிருந்து 52 சதவீதமாக உயர்ந்தது. அதே நேரத்தில் அதிமுகவின் வாக்கு வங்கி என்பது 23 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக குறையும் என்றும் பாஜகவின் வாக்கு வங்கி என்பது 18 சதவீதத்திலிருந்து 21 சதவீதமாக உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிமுக மூலம் எப்படியாவது தாமரையை மலர வைக்க பாஜக முயற்சி செய்கிறது.
பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை அமைத்தது. இதனால் பாஜக வெற்றி பெற்றாலும் கூட பெரும்பான்மை பெறுவதை அவர்களால் தடுக்க முடிந்தது. தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருவோம் என்று கூறியுள்ளார். அதேபோன்று தமிழகத்திலும் திமுகவுக்கு எதிராக எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்று கூடி கூட்டணி அமைத்தால் திமுக அடிசறுக்க வாய்ப்பிருப்பதாக பாஜக கூறி வருகிறது. மேலும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 13 மாதங்கள் இருப்பதால் பொறுத்திருந்துதான் இதனை பார்க்க வேண்டும்.