
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 2,381 அங்கன்வாடி மையங்கள் தொடர்ந்து செயல்பட பள்ளிக்கல்வித்துறை அனுமதி கொடுத்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதன் பிறகு அங்கன்வாடி மையங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியத்தை சரியான முறையில் வழங்க வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஆசிரியர்களுக்கு மாதத்தின் முதல் தேதியிலேயே சம்பளம் வழங்கும் முறையை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் எனவும், அதில் எந்த காலதாமதமும் ஏற்படக்கூடாது என்றும், இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து அங்கன்வாடி வகுப்புகளில் பணியாற்றும் தற்காலிக சிறப்பாசிரியர்களுக்கு மாதத்திற்கு ஒரு நாள் தற்செயல் விடுப்பு அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளது. மேலும் பணியாற்றும் ஆசிரியர்களின் விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும், அவர்கள் எமிஸ் எண்ணை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.