நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த வெள்ளிக்கிழமை குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கிய நிலையில் கடந்த சனிக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதங்கள் நேற்று தொடங்கிய நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதில் வழங்கி வருகிறார். அவர் பேசும்போது, தொடர்ந்து மக்கள் எனக்கு வாய்ப்பு கொடுத்ததால் 14-வது முறையாக குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்காக பேசுகிறேன்.

குடியரசு தலைவர் தன்னுடைய உரையில் அடுத்த 24 வருடங்களில் இந்தியா எப்படி இருக்கும் என்பதை தெளிவாக கூறியுள்ளார். வறுமையில் இருந்து மீட்க வேண்டும் என்ற குரலை மட்டும் தான் கடந்த 50 வருடங்களாக நாம் கேட்டுக் கொண்டிருந்தோம். ஆனால் தற்போது பத்து வருடங்களில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டு வந்துள்ளனர். இதை நினைத்து நான் மிகுந்த பெருமை கொள்கிறேன். நாட்டில் 4 கோடி ஏழை மக்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. 12 கோடிக்கும் அதிகமான கழிவறைகள் கட்டப்பட்டு பெண்கள் மற்றும் சிறுமிகளின் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுள்ளது. 12 கோடிகளுக்கும் அதிகமான வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஏழையின் வீட்டிற்கு முன்பாக புகைப்படம் எடுத்தவர்களுக்கு அவர்களைப் பற்றி பேசும்போது அலர்ஜி ஏற்படுவது இயல்புதான்.

கச்சா எண்ணெயை இறக்குமதி செய்துவரும் நிலையில் எத்தனால் கலப்பின் மூலம் இறக்குமதி குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை சேமிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் பல லட்ச ரூபாய் ஊழல் செய்யப்பட்டுள்ளது என்ற தலைப்பு செய்திகள் வந்த நிலையில் கடந்த 10 வருடங்களாக பல லட்ச ரூபாய் ஊழல் செய்யப்பட்டுள்ளது என்ற தலைப்பு செய்திகளே வரவில்லை. ‌ மேலும் நாங்கள் பல லட்சம் கோடியை சேமிக்கும் நிலையில் அதனை கண்ணாடி மாளிகைகள் கட்ட பயன்படுத்தாமல் இந்தியாவை கட்டமைக்க பயன்படுத்தி வருகிறோம் என்று பெருமிதமாக கூறினார்.