
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற காவல் மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, இரண்டாம் நிலை காவலர்களுக்கான காலி பணியிடங்களை குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கடந்த மூன்று ஆண்டுகளில் மொத்தமாக 16,199 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
குறிப்பாக, 2020-21ஆம் ஆண்டு 10,329 காலிப்பணியிடங்கள், 2022ஆம் ஆண்டு 3,271 காலிப்பணியிடங்கள், 2023ஆம் ஆண்டு 2,599 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும், 2024-25ஆம் ஆண்டிற்காக 2,831 காலிப்பணியிடங்கள் கணக்கீடு செய்யப்பட்டுள்ளன என்றும், இவை தொடர்பாக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் விரைவில் அறிவிப்பு வெளியிட உள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
காலிப்பணியிடங்களை நிரப்பும் பணிகள் முன்னேற்றம் காணும் நிலையில் இருப்பதாகவும், காவல் துறையின் செயல்திறனை மேம்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் முதலமைச்சர் உறுதியளித்தார். விவாதத்தின் போது, கடந்த மூன்று ஆண்டுகளில் திமுக ஆட்சியின் சட்டம் ஒழுங்கு நிலை திருப்திகரமாக இல்லை என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் சட்டத்தின் ஆட்சி உறுதி செய்யப்பட்டதாகவும், காவல்துறை செயல்பாடு நன்றாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். தற்போதைய திமுக ஆட்சியில், காவல்துறையின் செயல்பாடு பின்வாங்கி உள்ளதாகவும், மாநில மக்களின் பாதுகாப்பு நிலை சவாலாக மாறியுள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்தார்