
சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேடு புதிய காலனியில் வசிக்கும் விஜயராணி என்பவர் மத்திய குற்ற பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனது தாய் சரோஜாவின் பெயரில் வெள்ளனூர் ஆர்ச் அந்தோணியார் நகரில் 2,400 சதுர அடி நிலம் இருந்தது. அதனை 2 பாகமாக பிரித்து எனது அக்காள் அமுலுவின் கணவர் ராமமூர்த்தியின் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது.
அப்போது எனக்கு 15 வயது இருந்ததால் எனது தாயை கார்டியனாக போட்டு மீதி நிலத்தை எனது பெயரில் பத்திரப்பதிவு செய்தனர். இந்நிலையில் ராமமூர்த்தி போலி ஆவணம் தயாரித்து விஜயலட்சுமி என்பவர் மூலமாக ஆள் மாறாட்டம் செய்து 80 லட்ச மதிப்புள்ள எனது நிலத்தை அமுலுவின் பெயரில் தான செட்டில்மெண்ட் செய்து கொண்டார். அதன் பிறகு எனது அக்காளின் மூத்த மகன் மனோஜ் பெயருக்கு அந்த நிலத்தை பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளனர்.
எனவே மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு நில மோசடி தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி ராமமூர்த்தி, அவரது மகன் மனோஜ், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.