தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரை சேர்ந்தவர் பரீடா பேகம். இவர் துபாயில் உள்ள ஷெனாஸ் பேகம் என்ற என்பவரின் வீட்டில் பணி பெண்ணாக சேர்ந்தார். இதற்கு இந்திய மதிப்பில் 31,700 ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என்றும் தங்குமிடம் உணவு இலவசம் என்றும் கூறப்பட்டது.

அதோடு வேலை பிடிக்கவில்லை என்றால் எப்போது வேண்டுமென்றாலும் சொந்த நாட்டிற்கு திரும்பி விடலாம் என்று ஷெனாஸ் பரீடாவிடம் கூறியுள்ளார். இதை நம்பிய பரீடா கடந்த வருடம் நவம்பர் மாதம் நான்காம் தேதி 30 நாள் விசிட் விசா மூலம் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு அரபு குடும்பம் ஒன்றில் பணி பெண்ணாக வேலையை தொடங்கிய பரீடாவுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தான் இந்தியாவுக்கு திரும்புவதாக பரீடா கூறியுள்ளார். ஆனால் ஷெனாஸ் பரீடாவின் பாஸ்போர்ட்டுகளை பதுக்கி வைத்து விட்டதாக தனது சகோதரி பமீடாவிடம் கூறியுள்ளார்.

பின்னர் பரீடாவை ஷெனாஸ் ஓமன் நாட்டிற்கு கடத்தி சென்றதாகவும் இதனால் தனது சகோதரியை தன்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் தனது சகோதரியை மீட்டு மீண்டும் இந்தியாவிற்கு அழைத்து வர உதவி வேண்டும் என்றும் பமீடா மத்திய வெளியுறவுத்துறை  மந்திரி ஜெய்சங்கருக்கு கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் தேதி கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில் ஓமனில் இருக்கும் இந்திய தூதரகம் எக்ஸ் வலைதள பக்கத்தில் தூதரக அதிகாரிகள் பரீடா பேகத்திடம் பேசியதாகவும் விரைவில் அவர் இந்தியாவிற்கு திரும்புவதற்கான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.