அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாநிலத்தில் மெகன் கிங் என்ற பெண் வசித்து வருகிறார். இவர் தனது 16 வயதில் பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது பந்தை  பிடிக்க முயற்சித்தால் தவறி விழுந்தார். அதில் அவருக்கு  இடது கால் மற்றும் முதுகெலும்பு மோசமாக பாதிக்கப்பட்டது. இதனால் அவரது தலை முதுகெலும்பிலிருந்து பிரிந்த நிலையில் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமானது. அதோடு இரு தோள்பட்டைகளிலும் பலத்த அடி ஏற்பட்டதால் பல அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டும் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இதைத்தொடர்ந்து 2015 ஆம் ஆண்டில் அவருக்கு ஹைப்பர்மொபைல் எலர்ஸ்-டான்லோஸ் சிண்ட்ரோம் (hEDS) எனப்படும் மரபணுக் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நோயால் உடலில் உள்ள கொலாஜன் தயாரிப்பு பாதிக்கப்படுவதால், மூட்டுகள் பலவீனமடைந்து தவறாக இயங்க வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் கூறினர். அதனால் ஒரு ஆண்டுக்குள் அவரது கழுத்து முதுகெலும்பிலிருந்து பின்னாகிவிட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு நடத்தப்பட்ட சிகிச்சையின் போது மண்டை ஓடு உள்புறமாக பிரிக்கப்பட்டதால் அவரது தலையை மருத்துவர்கள்  கைகளால் தாங்கிக் கொண்டு அறுவை சிகிச்சை செய்தனர்.

கிட்டத்தட்ட 37 அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு மருத்துவர்கள் அவரது தலையை முதுகெலும்புடன் மீண்டும் இணைத்து அவருக்கு புதிய வாழ்க்கையை அளித்துள்ளனர். இவ்வாறு பல போராட்டங்களை கடந்தும் தலையையும், முதுகையும் நகர்த்த முடியாத நிலை ஏற்பட்ட நிலையிலும் நான் வாழ்வை நிறுத்தவில்லை என்று மெகன் சமூக வலைதளங்களில் தன்னம்பிக்கையுடன் பதிவிட்டுள்ளார். அதில் நான் இப்போது “ஒரு மனித சிலை மாதிரியே இருந்தாலும், என் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டே இருக்கிறேன்” என்று பெருமையாக கூறுகிறார்.

மேலும் பல ஆண்டுகளாக பல போராட்டங்களை சந்தித்த இவர் சமூக வலைதளங்களில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.