
காயல்பட்டினம் கோமான் நடுத்தெருவைச் சேர்ந்த யாகூப் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி சாஜிதா பார்வீன் கடந்த ஆண்டு மார்ச் 11ஆம் தேதி வீட்டு லாக்கரை திறந்தபோது, தவறுதலாக தங்க நாணயங்கள் இருந்த பெட்டியை வெளியே வைத்துவிட்டதாக கூறப்படுகிறது.
அந்த பெட்டியில் தலா 8 கிராம் எடை கொண்ட 38 தங்க நாணயங்கள் இருந்ததன் மதிப்பு சுமார் ரூ.20 லட்சம் ஆகும். சாஜிதா பா்வீன், கடந்த ஜூலை மாதத்தில் மீண்டும் லாக்கரைத் திறந்தபோது தங்க நாணயங்கள் காணாமல்போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து அவரது மகன் ஷேக் முஹ்ஸின் ஆறுமுகனேரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை தொடங்கினர்.
திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், சம்பவத்தில் ஈடுபட்டதாக அருணாசலபுரத்தை சேர்ந்த வீட்டுப்பணியாளரான அல்பியா, அவரது சகோதரி இசக்கி தங்கம் மற்றும் மகன் தமிழரசன் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
விசாரணையில், திருடப்பட்ட தங்க நாணயங்களை அவர்கள் அடகு வைத்து வட்டிக்காக பணம் கொடுத்ததும், புதிய வீடு கட்ட முயற்சி செய்ததும் தெரியவந்தது. சுமார் 8 மாதங்களுக்குப் பின் இந்த திருட்டு வழக்கில் குற்றவாளிகள் பிடிபட்டுள்ளனர்.