உலகம் முழுவதும் நேற்று காதலர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஒருபுறம் காதலர் தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், இந்நாளில் கடந்த 2019-ஆம் ஆண்டு புல்வாமா பகுதியில் நடந்த தாக்குதலில் 40 வீரர்கள் பலியாகினர். இத்தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் தியாக உணர்வை போற்றும் வகையில் ராமநாதபுர மாவட்ட  2 வாலிபர்கள்  நேற்று நடைபயணம் மேற்கொண்டனர். இவர்கள் ராமநாதபுரம் அருகே உள்ள தேவிபட்டினம் என்ற பகுதியை சேர்ந்தவர்கள்.  ஹபிஸ்ரகுமான், வினோத்குமார் என்ற இருவரும் 40 வீரர்களின் நினைவாக 40 மரக்கன்றுகளுடன் தேசிய கொடியை ஏந்திக்கொண்டு நடைபயணமாக ராமநாதபுரம் வந்தனர்.

மேலும் உயிரிழந்த வீரர்களின் நினைவாக மரக்கன்றுகளை நட்டு, அவர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்தனர். பின்னர் அவர்கள் இருவரும் கூறியுள்ளதாவது, உலகம் முழுவதும் காதலர் தினமாக இருக்கலாம். ஆனால், ஒவ்வொரு இந்தியனுக்கும் இது கருப்புதினம் என்றும், புல்வாமா தாக்குதலில் நாட்டிற்காக 40 வீரர்கள் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களின் தியாகத்தை ஒவ்வொருவரும் எண்ணி பார்க்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ந் தேதியை கருப்புதினமாக அனுசரிக்க வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள்.