அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று இலக்கு 2026 என்ற தலைப்பில் வேலூரில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது, தமிழகத்தில் எப்போதும் இருமொழிக் கொள்கை மட்டும் தான் கண்டிப்பாக நாங்கள் மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம். மத்திய அரசு கண்டிப்பாக மக்களுக்காக நிதி ஒதுக்க வேண்டும் என்றார். அதன்பிறகு 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் அதிமுகவை தேடி கூட்டணி வரும் என்றும் நாங்கள் யாரையும் தேடி போக மாட்டோம் என்றும் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்றும் கூறினார். 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும். திமுகவுக்கு கொள்கையும் கிடையாது கூட்டணியும் கிடையாது அடிக்கடி நிறம் மாறக்கூடிய கட்சி. அதிமுகவை பற்றி பேச முதல்வர் ஸ்டாலினுக்கு தகுதி இல்லை.

தமிழகத்தில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பிப்ரவரி 14ஆம் தேதி வரையில் மட்டும் 207 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளது. குழந்தைகள் தன்னை அப்பா, அப்பா அப்பா என்று பாசமாக அழைப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் அப்பா என கதறுவது முதல்வர் ஸ்டாலினுக்கு கேட்கவில்லையா என்று கூறினார். மேலும் தமிழ்நாட்டில் சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என்பது அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கூட மாணவிகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நடப்பதாக செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி குறுகிய காலத்தில் பல போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.