பாகிஸ்தான் நாட்டிலுள்ள குவாட்டா நகரில் இருந்து பெஷாப் நகருக்கு நேற்று முன்தினம் ஜாபர் விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலை பலுச்சிஸ்தான் பயங்கரவாதிகள் ‌சிறைபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அவர்களிடமிருந்து பனையக் கைதிகளை மீட்டதோடு ரயிலையும் மீட்டுள்ளனர். அதாவது அந்த ரயில் ஒரு சுரங்கத்திற்குள் நுழைந்தபோது வெடிவைத்து தண்டவாளத்தை தகர்த்தனர். இதனால் ரயில் தடம் புரண்டதால் அதனை பயன்படுத்தி கடத்தினர். இந்த ரயிலில் மொத்தம் ஒன்பது பெட்டிகள் இருந்த நிலையில் அதில் சில பெட்டிகளில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இருந்த நிலையில் அவர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர சண்டை ஏற்பட்டது.

இந்த துப்பாக்கி சூடு சண்டையில் 30 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் 400க்கும் மேற்பட்டவர்களை பிணையக் கைதிகளாக பிடித்தனர். ‌ இதைத்தொடர்ந்து அவர்கள் அரசாங்கத்திடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த  நிலையில் உடனடியாக ராணுவம் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்றது. அவர்கள் 48 மணி நேரத்திற்குள் தங்கள் ஆதரவாளர்களை விடுவிக்காவிடில் அனைவரையும் கொலை செய்வோம் என்று மிரட்டிய நிலையில் பாகிஸ்தான் ராணுவம் துரிதமாக செயல்பட்டது. அவர்களின் தொடர் முயற்சியின் காரணமாக 33 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதோடு பனையக் கைதிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த தாக்குதலில் 21 பயணிகள் மற்றும் நான்கு ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. அதன் பிறகு 346 பயணிகளை பத்திரமாக மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதில் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது. மேலும் மீட்பு பணிகள் நிறைவடைந்ததாகவும் ரயில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் அந்த நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.