
சட்டப்பேரவையில் அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் கூறியதாவது, போக்குவரத்துத் துறை பணியாளர்களுக்கு மோட்டார் வாகன விதிகள் மற்றும் சட்டங்களை பற்றிய முழுமையான விவரங்களை பயிற்றுவிக்கவும், இத்துறை தொடர்பான நீதிமன்ற தீர்ப்புகள், சட்டங்கள் ஆகியவற்றின் மீதான நடப்புத் தகவல்களை தெரியப்படுத்த ரூ.50 லட்சம் செலவில் நூலகம் அமைக்கப்படும்.
மின்னணு அலுவலகம் மற்றும் மின்னணு ஆளுமை பணிக்காக ரூ.488. லட்சம் செலவில் புதிதாக 596 எண்ணிக்கையில் கணிணிகள் 269 பிரிண்டர் மற்றும் 269 ஸ்கேனர் கொள்முதல் செய்தல். இப்பணிகள் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை வாயிலாக மேற்கொள்ளப்படும்.
தமிழ்நாட்டில் 18 தானியங்கி வாகன சோதனை நிலையங்கள் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது, போக்குவரத்துத் துறை மூலம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் 5 தானியங்கி வாகன சோதனை நிலையங்கள் (ATS) அமைக்க முன்மொழியப்பட்டுள்ளது. இதன் மதிப்பீடு ரூ. 2540 லட்சம் ஆகும்.
கோயம்புத்தூர், திருநெல்வேலி, தஞ்சாவூர், வேலூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் செயல்படும் அரசு தானியங்கி பணிமனைகளுக்கு ரூ.30 லட்சம் செலவில் மின்னணு பழுதுகளை கண்டறியும் கருவிகள் (Diagnostic Tools) கொள்முதல் செய்து வழங்கப்படும் என கூறியுள்ளார்.