ஐந்து வயது சிறுவன் 100 யோகாசனத்துடன் 100 திருக்குறளை மனப்பாடமாக சொல்லி உலக சாதனை படைத்துள்ளார்.

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாதவன் என்ற சிறுவன் 1-ஆம் வகுப்பு படிக்கிறான். இரண்டு வயதில் இருந்தே மாதவன் யோகாசனம் பயின்று வந்துள்ளார். மாதவனின் பெற்றோருக்கு தமிழ் மீதும், திருக்குறள் மீதும் ஆர்வம் அதிகம். இதனால் தங்களது மகனை யோகாசனம் செய்ய வைத்து திருக்குறளையும் கூறி உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபடுத்தினர்.

இந்நிலையில் 5 வயதான மாதவன் 15 நிமிடம் 14 நொடிகளில் 100 யோகாசனத்துடன் 100 திருக்குறளையும் தொடர்ந்து கூறி நோபல் உலக சாதனை பெற்றுள்ளார். நோபல் உலக சாதனை நிறுவனம் சிறுவனின் சாதனையை அங்கீகரித்து சிறுவனுக்கு விருது மற்றும் பதக்கங்களை வழங்கிய கௌரவித்தது. தனது சொந்த ஊரிலேயே உலக சாதனையை நிகழ்த்தி காட்டி விருது பெற்ற மாதவனுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.