
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கதிர்காமம் பகுதியில் ஒரு தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 6 வயது மற்றும் 5 வயதில் இரு மகள்கள் இருக்கும் நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக குடும்பத்தினரை விட்டு விட்டு கணவர் மட்டும் பிரிந்து சென்று விட்டார். அதன்பின் விழுப்புரத்தில் உள்ள தன்னுடைய தாய் வீட்டில் குழந்தைகள் இருவரையும் அந்த பெண் விட்டுவிட்டார். அதன் பிறகு அவர் புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். கடந்த 2017 ஆம் ஆண்டு அந்த சிறுமிகள் முறையே 2-ம் வகுப்பு மற்றும் 1-ம் வகுப்பு படித்து வந்தனர். அந்த சமயத்தில் சிறுமிகளின் பாட்டி விவசாய நிலத்திற்கு வேலைக்கு செல்வதால் மாலையில் தான் வீடு திரும்பு வார். இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு சிறுமிகள் இருவரையும் அப்பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் என்பவர் தனித்தனியாக அவருடைய வீட்டிற்கு அழைத்து சென்று மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால் சிறுமிகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்படவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பிரசாந்த் உட்பட 15 பேர் தனித்தனியாக ஒருவருக்கொருவர் தெரியாமல் 2 சிறுமிகளையும் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து செல்வசேகர், முருகன், கமலக்கண்ணன், செல்வம், சந்திரமோகன், துரைராஜ், ரமேஷ், மகேஷ், தமிழரசன், ரவிக்குமார், பிரபாகரன், பிரசாந்த், அஜித் குமார், தீன தயாளன், துரைசாமி, துரைராஜ் ஆகிய 15 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் 15 பேரும் ஒரு வருடத்திற்குள் பலமுறை சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது தொடர்பான வழக்கு விழுப்புரம் மாவட்டம் போக்சோ கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த விசாரணை நடைபெற்று வந்த சமயத்தில் 5 வயது சிறுமி பரிதாபமாக இறந்துவிட்டார். மேலும் இந்த வழக்கு நீதிமன்றத்தில் தற்போது விசாரணைக்கு வந்த நிலையில் குற்றவாளிகள் 15 பேருக்கும் தலா 20 வருடங்கள் சிறை தண்டனையும், மொத்தம் ரூ.4,80,000 அபராத தொகையும் விதிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அரசு சார்பில் ரூ.4,50,000 இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.9,30,000 வழங்க வேண்டும். மேலும் குற்றவாளிகள் அனைவரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்