
மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய கமாண்டோ பயிற்சி காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் ரவுடிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டு அவர்களைப் பிடிக்கும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
அதன்படி தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவின் அடிப்படையில் மதுரை மாவட்டத்தில் ரவுடிகள் மற்றும் சந்தேகத்திற்குரிய நபர்களின் நடமாட்டத்தை கண்டறிய துப்பாக்கி ஏந்திய நிலையில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரையில் அலங்காநல்லூர், நாகமலை மற்றும் புதுக்கோட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் கடந்த 50 நாட்களில் மட்டும் 126 ரவுடிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்களில் 30 வயதிற்கு கீழ் உள்ள இளைஞர்கள் 100 பேர் உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளன. இவர்கள் வழிப்பறி நோக்கத்தோடு கத்தியுடன் சுற்றி திரிந்ததும் மற்றும் சில நபர்கள் வணிகர்களை மிரட்டி மாமுல் கேட்பது போன்ற சட்டவிரோதமான குற்றங்களில் ஈடுபட்டதால் அவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.