மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூர் கிராமத்தில் அதிமுக சார்பாக திண்ணை பிரச்சாரம் இன்று நடைபெற்ற நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா அதில் கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவிற்கு ஒரு வலிமையான எதிர்காலம் இருக்கின்றது. அதிமுக இரட்டை தலைமையாக இருந்தபோது பெரிய வெற்றியை பெறவில்லை. தற்போது ஒற்றை தலைமையில் அதிமுகவின் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. மக்களின் ஆதரவும் தற்போது பெருகி உள்ளது. அதிமுக புதிய உச்சத்தை தொட்டு 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறக் கூடிய வகையில் வலிமையான எதிர்காலம் உள்ளது.

ஓபிஎஸ்-க்கு செல்வாக்கு நன்றாக இருந்திருந்தால் பாஜக அவரை கட்சியில் இணைத்திருக்கும். அந்தக் கட்சியை நம்பி சென்ற அவர் தற்போது செல்வாக்கை இழந்துள்ளார். ஆறு மாத காலம் அதிமுகவிற்கு எந்த ஒரு இடையூறும் செய்யாமல் அமைதியாக இருந்தால் அவரை மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்து நாங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் பேசி நடவடிக்கை எடுப்போம். தொடர்ந்து கட்சிக்கு இடையூறு செய்யும் செயல்களில் ஈடுபடுவது கட்சியின் வளர்ச்சிக்கு உகந்தது அல்ல. கட்சியின் நலனில் அக்கறை உள்ள மூத்த உறுப்பினர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது அழகல்ல என்று ராஜன் செல்லப்பா பேசியுள்ளார்.