
நாடு முழுவதும் சுங்கச் சாவடிகள் வழியாக செல்லும் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த 2019ம் ஆண்டு முதல் ஃபாஸ்டேக் நடைமுறை அமலுக்கு வந்தது. கால விரயம் – சில்லறைத் தட்டுப்பாடு – எரிபொருள் வீணாவது போன்ற நடைமுறைச் சிக்கல்களைத் தவிர்ப்பதற்காகவே, இந்த டிஜிட்டல் பேமென்ட் முறை செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுங்க சாவடிகளில் இனி GPS மூலம் கட்டணம் வசூலிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதன்மூலம் நேரம் மிச்சமாகும் என்றும், வாகனங்கள் செல்லும் தூரத்திற்கு ஏற்ப மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த முறைக்கான பரிசோதனைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், இன்னும் 6 மாதங்களில் இது அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.