சென்னை கொட்டிவாக்கம் நேரு நகர் பகுதியில் முகமது அலி (26) என்பவர் வசித்து வருகிறார். இவர் கார் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தன் நண்பர் ஒருவருடன் சேர்ந்து பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த மர்ம நபர்கள் சிலர் முகமது அலியை கடத்தி சென்றனர். இது தொடர்பாக அவருடைய நண்பர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். அந்த தகவலின் படி தரமணி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் விழுப்புரத்தில் உள்ள ஓங்கூர சுங்கச்சாவடியில் இளைஞர் மீட்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து அவரை கடத்திய சிலம்பரசன், சண்முகம், ரவி சங்கர், அருள், ஆறுமுகம், சாமுண்டி ஆகிய 6 பேரையும் கைது செய்தனர். இவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களிடம் நடத்திய விசாரணையில் ரங்கீலா என்ற பெண்ணை முகமது அலி கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் இருவரும் சரிவர பேசாமல் இருந்துள்ளனர். இதனால் ரங்கீலா கடந்த 13ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதனால் கோபமடைந்த ரங்கீலா குடும்பத்தினர் வாலிபரை கடத்தியது தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.